கலைச்சொற்கள்
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
Note: இப்பதிவின் மூலம், ஜெயமோகன் அவர்களின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
கலைச்சொற்கள், பொதுவாக தமிழ் இலக்கிய தளத்தில் பயன்படுத்தப்படுபவை. கலைச்சொல்லாக்கத்தில் மூன்று போக்குகள் காணப்படுகின்றன. சிற்றிதழ் சார்ந்த தமிழ் நவீன இலக்கியம், கல்வித்துறை, சோவியத் மொழியாக்கங்கள் ஆகியவை. மூன்றுமே கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளன. பலசமயம் ஒன்றைச்சுட்ட மூன்று கலைச்சொற்கள் உருவாகி மூன்றுமே புழக்கத்தில் இருக்கும். பொதுவாக ஓரளவு ஏற்கப்பட்ட ஒரு கலைச்சொல் இருக்கையில் அதையே பயன்படுத்துவது நல்லது. அது பொருத்தம் குறைவானதாக இருந்தாலும். ஏனென்றால் சொற்கள் என்பவை பெரும்பாலும் இடுகுறித்தன்மை கொண்டவை. அவை எதைக்குறிக்கின்றன என்று தெரிந்தாலே போதுமானது. பல கலைச்சொற்கள் அவ்வறிவுத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப பொருள் மாறுபாடு அடைந்தபடியே செல்லும். ஒவ்வொரு முறையும் கலைசொல்லை மாற்ற முடியாது.
கூடுமானவரை இவை அகர வரிசையில் உள்ளன . ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ – ஜெயமோகன்- உயிர்மை பதிப்பகம் – நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
Enlightenment - அக ஒளி
படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமை நோக்கு
Subjective - அகவயம்
ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது
Langue - அகமொழி
பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம். புறமொழிக்கு கொடுக்கச் சாத்தியமான அர்த்தங்களினால் ஆனது அது. அதுவே கேட்கும் மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது.
Satire - அங்கதம்
கேலிப்படைப்பு
Base - அடித்தளம்
மார்க்ஸிய நோக்கில் சமூகத்தின் பொருளியல் அமைப்பு. உற்பத்தி வினியோகம் இரண்டும் அடங்கியது
Hierarchy - அடுக்கதிகாரம்
அதிகாரம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பு
Rhetorics - அணியியல்
படைப்பின் மொழியில் செய்யப்படும் அலங்காரங்களைப் பற்றிய துறை
Non fiction - அபுனைவு
புனைவல்லாத எழுத்துக்கள்
Structure - அமைப்பு
கட்டுமானம். சமூகக்கட்டுமானம் மொழிக்கட்டுமானம் ஆகியவற்றைக் குறிக்கிறது இச்சொல்
Structuralism - அமைப்புவாதம்
‘மொழி என்பது பலவகையான கலாச்சாரக் குறிகள் ஒன்றோடொன்று சிக்கலான முறையில் பின்னி உருவாகும் ஓர் அமைப்பு’ என்பதே இந்தக் கொள்கையின் எளிய வடிவம். பேச்சு எழுத்து எல்லாமே மொழிக்குள் உருவாக்கப்படும் அமைப்புகள். ஒரு அமைப்பை அதைக் கேட்பவன் அல்லது படிப்பவன் குறிகளாகப் பிரித்து பொருள் கொள்கிறான். அதற்கு அம்மொழி நிகழும் கலாச்சாரச் சூழல் அவனுக்கு உதவுகிறது மொழியியலாளர்களான மிகயீல் பக்தின், பெர்டினன்ட் டி சசூர், மானுடவியலளரான க்ளோட் லெவி ஸ்டிராஸ் அரசியல் கோட்பாட்டாளரான அல்தூஸர் போன்ற அறிஞர்களால் பல தளங்களில் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட அணுகுமுறை இது.
Review Session 1
Structuralism - அமைப்பியல்
அமைப்புவாதத்தின் முதல் மொழியாக்கப் பெயர் ஒரு தனித்த அறிவுத்துறை அல்ல. அது மொழியியலுக்குள் செயல்படும் ஒரு கொள்கையே. ஆகவே அமைப்புவாதம் என்ற சொல்லே பொருத்தமானது என க.பூரணசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Alienation - அயன்மை
அன்னியமாதல். பொதுவான போக்கு மற்றும் மையப்போக்கில் இருந்து விலகிச்செல்லுதல். மார்க்ஸிய நோக்கில் உற்பத்தின் படைப்புத்தன்மையிலிருந்து பாட்டாளி மனவிலக்கம் கொள்ளுதல். இருத்தலியல் நோக்கில் மனிதன் அடிப்படையான இயற்கை சக்திகளிடமிருந்து விலகுதல்
Abstract - அருவம்
திட்டவட்டமான உருவம் அற்றது. நுண்மம் என்பது மேலும் பொருத்தமான சொல்
Aesthetics - அழகியல்
அழகை உருவாக்கும் இயல்புகளைப் பற்றிய துறை . வடிவங்கள் கூறுமுறைகள் ஆகியவற்றின் அமைப்பைப் பற்றிய ஆய்வு.
Age of enlightenment - அறிவொளிக்காலம்
ஐரோப்பாவில் கலை இலக்கியம் சார்ந்த நுண்ணுணர்வு உருவான காலக்கட்டம்
Episteme - அறிவுக்குவியம்
அறிவின் முதற்கட்ட வடிவம். அறிவின் அடிப்படை அலகு. அறிவுக்கூறு என்ற சொல்லாட்சியும் உண்டு
Episteme - அறிவுக்கூறு
அறிவின் முதற்கட்ட வடிவம். அறிவின் அடிப்படை அலகு.
Alienation - அன்னியமாதல்
பொதுவான போக்கு மற்றும் மையப்போக்கில் இருந்து விலகிச்செல்லுதல். மார்க்ஸிய நோக்கில் உற்பத்தியின் படைப்புத்தன்மையிலிருந்து பாட்டாளி மனவிலக்கம் கொள்ளுதல். இருத்தலியல் நோக்கில் மனிதன் அடிப்படையான இயற்கை சக்திகளிடமிருந்து விலகுதல். அயன்மை
Empiricism - அனுபவ வாதம்
புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை. புலனறிவாதம் நிரூபண வாதம் என்ற சொற்களும் உண்டு
Inference - அனுமானம்
அறிந்தவற்றிலிருந்து அறியாதவைப் பற்றி செய்யப்படும் ஊகம்.
Review Session 2
Hegemony - ஆதிக்கக் கருத்து
ஒரு சமூகச் சூழலில் மேலாதிக்கம் செலுத்தும் கருத்தியல். கருத்ததிகாரம் மேலும் சரியான சொல் . இது அண்டானியோ கிராம்ஷி என்ற மார்க்ஸிய சிந்தனையாளருக்குப் பின் இந்த தனிப்பொருளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது
Will to power - ஆதிக்க விருப்புறுதி
பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற விருப்பமும் வேகமும். இது மனிதர்கள் அனைவரையும் இயக்கும் அடிப்படை விசை என்பது பின்நவீனத்துவ காலகட்ட உளவியலின் கோட்பாடாகும்.
Archives - ஆவணக்கிடங்கு
பழைய ஆவணங்களின் சேமிப்பு. ஆவணக்காப்பகம் என்பது மேலும் பொருத்தமான சொல்
Sub conscious - ஆழ்மனம்
சிந்தனைகளினால் ஆன மேல்மனத்திற்கு அடியில் மறைந்துள்ள மனம். கனவுகளில் வெளிப்படுவது. ஃபிராய்டின் உளப்பகுப்பில் ஒரு முக்கியமான உருவகம்.
Personality - ஆளுமை
ஒரு மனிதனின் குணாதிசயங்களின் தொகுப்பு.
Schizophrenia - ஆளுமைப்பிளவு
மனித ஆளுமையின் ஒருங்கிணைவு சிதறும் ஒரு உளச்சிக்கல். இலக்கியத்தில் இது முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. மனம் என்றால் என ஆளுமை என்றால் என்ன என்ற வினாக்களை எழுப்புவதற்கு உதவுகிறது.
Schizophrenic novel - ஆளுமைப்பிளவு நாவல்
ஆளுமைப்பிளவை வெளிப்படுத்தும் நாவல்.’ நகுலன் டைரி’ நகுலன் எழுதிய முக்கியமான ஆளுமைப்பிளவு நாவல்
Dynamism - இயங்காற்றல்
செயலூக்கம் கொண்ட நிலை
Dialectics - இயங்கியல்
முரணியக்கம் மட்டுமே ஒரே இயக்க முறை என்று வாதிட்ட ருஷ்ய மார்க்ஸியர்கள் முரணியக்கவியலை இப்படிக் குறிப்பிட்டார்கள்.
Phenomenon - இயற்காட்சி
திட்டவட்டமான பொருள் கொண்ட ஒருநிகழ்வு.
Review Session 3
Naturalism - இயல்புவாதம்
திட்டவட்டமான தகவல்களை மட்டும் சார்ந்து எழுதும் இலக்கியமுறை. கற்பனை அதிகமும் தகவல்களைத் தொகுத்து வாழ்க்கைச் சித்திரத்தை அளிப்பதிலேயே உள்ளது. யதார்த்தவாதத்தின் ஒரு தீவிர வடிவம். யதார்த்தவாதம் மன உணர்வுகளையும் கருத்தில் கொள்ளும் என்பதே வேறுபாடு.
Existence - இருப்பு
மனிதர்கள் தாங்கள் இருக்கிறோம் என தாங்கள் உணரும் நிலை. ஒரு தத்துவக் கலைச்சொல்.
Existentialism - இருத்தலியம்
மனிதர்களின் இருத்தலின் சாரமென்ன என்று ஆராய்ந்த இருபதாம் நூற்றாண்டு சிந்தனை முறை. மனிதன் இயற்கைச் சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டு தன்னை தானாக உணரும்போது துயரும் தனிமையும் கொண்டவனாகிறான். அவன் வாழ்க்கைக்குப் பொருளில்லாமலாகிறது அதிலிருந்து அவனுக்கு மீட்பு இல்லை என்று வாதிட்டது இது.
Dualism - இருபொருள்வாதம்
எதையும் இரண்டாகப் பிரித்து ஆராயும் நோக்கு. மனம் – அறிவு இயற்கை- மனிதன் இவ்வாறாக. இது மதத்திலிருந்து தத்துவத்திற்கு வந்த நோக்கு
Literariness - இலக்கியத்தன்மை
படைப்பின் இலக்கிய அம்சம் மேலோங்கியிருத்தல். பொதுவாக வாசகக் கற்பனைக்கு அதிக இடம் கொடுக்கும் படைப்பு இலக்கியத்தன்மை மிக்கது எனப்படுகிறது.
Idealism - இலட்சியவாதம்
பெரும் இலக்குகளை முன்வைத்து செயல்படும் வாழ்க்கை நோக்கு
Theology - இறையியல்
இறைக்கோட்பாடு பற்றிய தர்க்கங்கள் அடங்கிய அறிவுத்துறை.
Absence - இன்மை
ஒன்றின் இல்லாமை. இருப்பு போலவே இல்லாமையும் கருத்துத் தளத்தில் ஒரு முக்கியமான விஷயமே
Form - உருவம்
ஒரு படைப்பின் அல்லது கூற்றின் மொழி வடிவம். அதை உருவாக்குபவனால் அளிக்கப்படுவது
Formalism - உருவவியல்
படைப்பு என்பது ஒரு வகை மொழியுருவமே என்று எடுத்துக்கொண்டு உருவத்தின் நோக்கம் இயல்பு அமைப்பு முறை ஆகியவற்றை ஆராயும் ஒரு மொழியியல் கோட்பாடு.
Review Session 4
Insight - உள்ளொளி
படைப்பாளி அல்லது தத்துவவாதி தன் தனிப்பட்ட, அந்தரங்க இயல்பால் கொண்டுள்ள உண்மை அறியும் திறன்.
Psychology - உளவியல்
மனித மனத்தை ஆராயும் செய்யும் அறிவியல்துறை
Psychoanalysis - உளப்பகுப்பாய்வு
வெளிமனத்தை ஓயவைத்து ஆழ்மனங்களை வெளியே கொண்டுவரும் ஆய்வுமுறை. மனித மனத்தை வெளிமனம், ஆழ்மனம், நனவிலி மனம் எனப் பிரித்து நோக்கும் ஃப்ராய்டிய கோட்பாட்டின் செயல்முறை இது
Sublime - உன்னதம்
ஒன்றின் உச்ச நிலை வெளிப்பாடு. பின் நவீனத்தளத்தில் மேலும் விரிவான பொருள் உண்டு
Media - ஊடகம்
மொழி மற்றும் குறிகள் மூலம் மனிதர்கள் தொடர்பு கொள்ளும் வழி. இதழ்கள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் அனைத்துமே
Media science - ஊடகவியல்
ஊடகங்களைப் பற்றிய ஆய்வுகளைச் செய்யும் அறிவுத்துறை
Texture - ஊடுபாவு
ஒரு நூலில் பல கூறுகள்மிணைந்து பரவியிருக்கும் தன்மை. நூலிழைப்பின்னல் என்றும் சொல்லாட்சி உண்டு
Intertextuality - ஊடுபிரதித்தன்மை
ஒரு நூலுக்குள் பல நூல்கள் தொடர்பு கொண்டிருத்தல். பல நூல்களை தொட்டுச்செல்லும் நூலியல்பு. பல்பிரதித்தன்மை
Narrator - எடுத்துரைப்பாளன்
கதையைச் சொல்பவன். கதைக்குள் இவன் வரலாம் வராமலும் இருக்கலாம்.
Response - எதிர்வினை
ஒரு செய்தித்தொடர்புக்கு வரும் மறு தொடர்பு. படைப்புக்கு வாசகன் அளிக்கும் எதிர்வினை மிக முக்கியமாக நவீன விமரிசனத்தில் கவனிக்கப்படுகிறது
Review Session 5
Grammatology - எழுத்தியல்
எழுது முறைகளைப்பற்றிய அறிவியல்
Futuristic - எதிர்காலவாதம்
எதிர்காலத்தைப் பற்றிய தர்க்கப்பூர்வ நோக்கு
Anti hero - எதிர்கதைத் தலைவன்
கதையில் வரும் எதிர்மறையான மையக்கதாபாத்திரம். வில்லன்.
Negative - எதிர்மறை
மாறான கருத்து அல்லது தரப்பு
Reception theory - ஏற்புக்கொள்கை
படைப்பின் வடிவ இயல்புகளை வாசகன் வாசிக்கும் விதத்திலிருந்து உருவகிக்கும் அழகியல்முறை.
Unity - ஒருமை
படைப்பில் வரும் ஒத்திசைவு
Phonemic - ஒலிசார்பு
சொல்லின் ஒலி சார்ந்து அறிதல்
Transliteration - ஒலிபெயர்ப்பு
பொருளுக்குப் பதிலாக ஒலியை மட்டும் இன்னொரு மொழிக்கு மாற்றுதல்.
Phonocentrism - ஒலிமையவாதம்
மொழியை ஒலியை அதாவது உச்சரிப்பை மையமாகக் கொண்டு பொருள் கொள்ளும் போக்கு. அமைப்பியல் திறனாய்வின் ஒரு கலைச்சொல்.
Phonetics - ஒலியியல்
சொற்களின் ஒலி அல்லது உச்சரிப்புக் குறித்த துறை
Review Session 6
Character - கதாபாத்திரம்
கதையில் வரும் மனிதர். கதைமாந்தர் என்றும் சொல்வதுண்டு
Ballad - கதைப்பாடல்
கதையை நீண்ட பாடலாகப் பாடும் நாட்டார் மரபு வடிவம்.
Saga - கதைத்தொடர்
தொடர்ச்சியாகச் சொல்லப்படும் கதைகள்
Deconstruction - கட்டுடைப்பு
படைப்பை வாசகன் குறிகளாக உடைத்து தனக்குரிய படைப்பை உருவாக்கி பொருள்கொள்ளும் முறை.
Mirror stage - கண்ணாடிப்பருவம்
குழந்தை தன்னை கண்ணாடியில் பார்த்து தான் என அறியும் நிலை. சுயம் உருவாகும் முதல் படி இது. பதினாறு முதல் பதினெட்டு மாதங்களுக்குள் இது நிகழ்கிறது. ழாக் லக்கான் என்ற அமைப்பியல் உளவியலாளரின் கோட்பாடு இது
கரிசல் இலக்கியம்
கோயில்பட்டி வட்டார கரியமண் நிலம் சார்ந்த எழுத்தி. கி. ராஜநாராயணன் முதல் லட்சுமணப்பெருமாள் அவரை எழுதுவது
Concept - கருத்தாக்கம்
ஒரு கருத்தை தர்க்கபூர்வமாக வகுத்துக்கொள்ளும் நிலை
Idealism - கருத்து முதல்வாதம்
கருத்தே முதன்மையானது அதன் புற வெளிபபடே பொருள்வய உலகம் என நம்பும் தத்துவ நிலைப்பாடு
Hegemony - கருத்ததிகாரம்
ஒரு சமூகச் சூழலில் மேலாதிக்கம் செலுத்தும் கருத்தியல். இது அண்டானியோ கிராம்ஷி என்ற மார்க்ஸிய சிந்தனையாளருக்குப் பின் இந்த தனிப்பொருளில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது .ஆதிக்கக் கருத்து
Concept - கருதுகோள்
ஒரு கருத்தை ஒட்டுமொத்த சிந்தனைக்கான முன்வரைவாக உருவகித்தல்
Review Session 7
Polemics - கருத்துப்பூசல்
கருத்துக்களின் பொருட்டு நடக்கும் தனிநபர் பூசல்.
Theme - கரு
கதையின் மைய எண்ணம்
Allegory - கருத்துருவகம்
ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.
Aphorism - கருத்துமொழி
ஒரு கருத்தை சுருக்கமாகவோ வேடிக்கையாகவோ கவித்துவமாகவோ சொல்லும் ஒற்றைச் சொற்றொடர் கூற்று
Romanticism - கற்பனாவாதம்
வாழ்வனுபவங்களையும் உணர்ச்சிகளையும் கற்பனை மூலம் வளர்த்து உச்சத்துக்கு கொண்டு சென்று ஆராயும் இலக்கியப் போக்கு. இது வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் கணக்கில் கொள்வதில்லை. சமநிலை நடுநிலை பற்றி கவலைப்படுவதில்லை. சாராம்சமானவை என எண்ணுவன பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது. பிறசொல், புத்தெழுச்சிவாதம்.
Poetic - கவிதையியல்
கவிதையின் இயல்புகளை ஆராயும் துறை
Metaphor - கவியுருவகம்
இலக்கியத்தில் இச்சொல் ஒரு வாசகன் குறிப்பான ஒரு அர்த்தத்தை நோக்கிச் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ள அல்லது வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ள ஓர் உருவகத்தை குறிக்கிறது
Carnivalesque - களியாடல்கோட்பாடு
ஒரு திருவிழாக்களம் போல பலவகையான கூற்றுகளும் அர்த்தங்களும் கட்டுப்பாடில்லாமல் ஒலிக்கும் சொல்வெளியே இலக்கியப் படைப்பு என்ற கோட்பாடு. ருஷ்ய மொழியியலாளர் மிகயீல் பக்தின் முன்வைத்தது
Black literature - கறுப்பிலக்கியம்
வெள்ளைய இனவெறியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் அடையாளங்களைப் பேணவும் போராடவும் எடுத்துக்கொள்ளும் முயற்சியின் விளைவாக உருவாகும் இலக்கியம். அமெரிக்கக் கறுப்பர்களிடையே உருவான ஒரு இயக்கம் இது. முதலில் தங்கள் வாழ்க்கையை பிறர் முன் பதிவுசெய்யும் எழுத்து முறையாக இது தொடங்கியது. பின்னர் இது தன் வேர்களையும் அடையாளங்களையும் தேடும் முயற்சியாக வளர்ந்தது. பின்னர் பல்வேறு கோணங்களில் தங்கள் வாழ்க்கையை ஆராயக்கூடிய கறுப்பின இலக்கியங்கள் உருவாயின.
Perspective - காட்சிக்கோணம்
கருத்துக்களை நோக்கும் அணுகுமுறை
Review Session 8
Clan - குலம்
பொதுவான பிறப்படையாளம் கொண்ட மக்கள் குழு
Totem - குலக்குறி
ஒரு குலம் தனக்கென கொண்டுள்ள குறியீட்டு அடையாளம்
Novelette - குறுநாவல்
நாவலுக்குரிய விரிவும் சிறுகதைக்குரிய கச்சிதமான ஒற்றைக்கதையும் கொண்ட சுருக்கமான வடிவம்
Bard - குலப்பாடகன்
குலத்தின் வெற்றிகளையும் குலவரிசையையும் பாடும் பாடகன். கவிஞனுக்கு முன்னோடி
Encoding - குறியாக்கம்
எழுத்துக்களாலும் அடையாளங்களாலும் குறிகளை உருவாக்குதல். எழுதுவதும் சரி போக்குவரத்துக் குறிகளைப்போடுவதும் சரி ஒரேவகையானவையே. இவையே குறியாக்கம் எனப்படுகின்றன
Sign - குறி
பிறிதொன்றைச் சுட்டும் ஒன்று. எழுத்து சொல் எல்லாமே குறிகள்தான். மொழி என்பது குறிகளின் தொகுப்பு . மொழியியல் சார்ந்த கலைச்சொல்
Signifier - குறிப்பான்
ஒரு குறியில் குறிப்புணர்த்தும் செயலை செய்வது எதுவோ அது .
Signified - குறிப்பீடு
ஒரு குறியில் குறிப்புணர்த்தப்படுவது எதுவோ அது
Semiotics - குறியியல்
குறியீடுகளைப்பற்றி ஆராயும் அறிவியல் துறை. பண்பாடு என்பது பலவகையான சமூகக் குறியீடுகளினால் ஆனது என்பதனால் இது முக்கியமான பண்பாட்டு அறிவியலாகும் .மொழியியலுக்கு நெருக்கமான உறவுள்ளது
Symbol - குறியீடு
ஒன்றைக் குறிப்பிடும் பொருட்டு பயன்படுத்தப்படும் அடையாளம். இலக்கியத்தில் குறியீடுகள் முக்கியமான தொடர்புமுறைகள்
Review Session 9
Symbolism - குறியீட்டியம்
குறியீடுகள் பயன்படுத்தும் அழகியல் முறை.
Locution - கூற்று
சொற்றொடர்மூலம் வெளிப்படும் மொழியின் அடிப்படை அர்த்த அலகு
Collective unconscious - கூட்டு நனவிலி
ஒரு மக்கள் கூட்டம் பொதுவாகக் கொண்டுள்ள நனவிலி. அச்சமூகத்தின் ஆழ்படிமங்கL அங்கு உறைகின்றன. இக்கருத்து சி.ஜி.யுங்கால் முன்வைக்கப்பட்டது.
Theory - கோட்பாடு
தகவல்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் பொது ஊகம் அல்லது கருத்து
Theoretical break - கோட்பாட்டொறுத்தல்
கோட்பாடு சார்ந்த அணுகுமுறையில் இருந்து துண்டித்துக்கொள்ளுதல் .பின் நவீனத்துவப் பண்புகளில் ஒன்று
Synonym - சமபொருட்சொல்
ஒரே பொருள் தரும் இன்னொரு சொல்.
Sociology - சமூகவியல்
சமூகத்தின் இயங்குமுறைகளைப் பற்றிய அறிவுத்துறை.
கடலூர் - செம்புல இலக்கியம்
பாண்டிசேரி வட்டார சிவப்புநில மண் குறித்த எழுத்து. கண்மணி குணசேகரன் உதாரணம்
Versification - செய்யுளாக்கம்
ஒரு கூற்றை யாப்பின் விதிகளுக்கு உட்பட்டு அமைத்தல்
Classic - செவ்விலக்கியம்
ஓர் இலக்கியச் சூழலில் அடிப்படைகளை வகுக்கும் பழமையான நூல் செவ்விலக்கியம் . அச்சூழலில் பெரும் மாற்றத்தை உருவாக்கி மகத்தான முன்னுதாரணமாக விளங்கும் பெரும் படைப்பும் செவ்விலக்கியம் எனப்படும்.
Review Session 10
Classicism - செவ்வியல்
செவ்விலக்கியங்களின் சிறப்பியல்புகள் செவ்வியல் எனப்படுகின்றன. அவை வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கி செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், வாழ்க்கையை எப்போதும் சமநிலையுடன் மிகைப்படுத்தாமல் நோக்கும் அணுகுமுறை, வாழ்க்கையின் எல்லா கூறுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் நடுநிலை, பிற்காலத்தில் உருவாகும் எல்லாவகை அழகியல் வடிவங்களுக்கும் முன்னுதாரணங்களை தன்னுள் கொண்டிருத்தல்.
Logo centrism - சொல்மையவாதம்
சொல்லை சிந்தனையின் அடிப்படை அலகாகக் கொள்ளும் ஒரு சிந்தனை முறை.
Etymology - சொல்பிறப்பியல்
சொற்களின் வேர்களையும் உருவாக்க முறைகளையும் ஆராயும் மொழியியல் பிரிவு
Discourse - சொல்லாடல்
மொழியில் அர்த்தத்தை கொடுப்பதும் கொள்வதுமாக நிகழும் பரிமாற்றம். பொதுப் பொருளில் உரையாடல். இலக்கியத்தில் மொழிவழி தொடர்புறுத்தலை மட்டுமே குறிக்கிறது.
Discourse - சொற்களன்
கருத்துப் பரிமாற்றம் நிகழும் மொழிச்சூழல் அல்லது பண்பாட்டுச்சூழல் . சொல்லாடல் களன் என்றும் இச்சொல் புழங்கப்படுவதுண்டு
Narrator - சொல்லி
கதையைச் சொல்பவன். கதைக்குள் இவன் வரலாம் வராமலும் இருக்கலாம். எடுத்துரைப்பாளன் இன்னொரு சொல்
Socialist realism - சோஷலிச யதார்த்தவாதம்
சோஷலிசத்தை நிறுவும்பொருட்டு எழுதப்படும் யதார்த்தவாத எழுத்து. கம்யூனிச அடிப்படையை ஏற்றுக்கோண்டு பாட்டாளி வர்க்க விடுதலையை மையமாக்கி கோட்பாட்டு ரீதியாக வரலாற்றையும் சமூகத்தையும் விளக்கும் நோக்கம் கொண்டது. இலக்கியம் மக்களுக்கு கற்பிக்கும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும். சமூக மாற்றத்திற்காகப் போராட வேண்டும், . தெளிவான அரசியல் கொண்டிருக்க வேண்டும் என்பவை இதன் நிபந்தனைகள். அழகியல் ரீதியாகப்பார்த்தால் இது யதார்த்தவாதமேயாகும். சோவியத் ருஷ்யாவின் இரண்டாவது அதிபராக இருந்த ஜோசஃப் வி ஸ்டாலின் 1932ல் உருவாக்கிய சொல்லாட்சி இது
Catharsis - சுத்திகரணம்
படைப்பின் துயரத்தை தானும் அனுபவிக்கும் வாசகன் அடையும் மன மேம்பாடு. இதை அரிஸ்டாடில் முன்வைத்தார்
Free verse - சுதந்திர கவிதை
யாப்பற்ற கவிதை
Deconstruction - தகர்ப்பமைப்பு
படைப்பை வாசகன் குறிகளாக உடைத்து தனக்குரிய படைப்பை உருவாக்கிப் பொருள் கொள்ளும் முறை. ழாக் தெரிதா முன்வைத்த ஆய்வுமுறை . பிறசொல் கட்டுடைப்பு தகர்ப்பமைப்பு என்பது எப்படி நாம் படைப்பை பிரித்து பின் அதிலிருந்து நமக்குரிய படைப்பை உருவாக்கிக் கொண்டு அடுத்தவ்கட்ட வாசிப்பில் மீண்டும் உடைத்து மீண்டும் உருவாக்கிக் கொண்டே செல்கிறோம் என்பதை ஆராய்கிறது. அதாவது இதில் தகர்ப்பும் அமைப்பும் ஒரே சமயம் செயல்படுகிறது. ஆரம்ப காலத்தில் இக்கோட்பாடு தமிழில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தவறாக ‘கட்டுடைத்தல்’ என்று பொருள் கொள்ளப்பட்டது.
Review Session 11
Logic - தர்க்கம்
ஒரு கருத்திலிருந்து இன்னொன்றை உருவாக்கும் செயல். தகவல்களை பொதுவான அடிப்படையில் ஒருங்கிணைக்கும் முறை
Vision - தரிசனம்
ஒட்டுமொத்த நோக்கு. சாராம்ச நோக்கு
Dalitism - தலித்தியம்
மராட்டிய வார்த்தையான தலித் என்பதற்கு மண்சார்ந்த என்று பொருள். பீமராவ் அம்பேகர் . மகாத்மா பூலே ஆகியோரின் செயல்பாட்டின் விளைவாக மராட்டியத்தில் உருவான தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சி தலித் இயக்கமென்று பெயர் சூட்டிக் கொண்டது. இதன் பாதிப்பு இலக்கியத்தில் தலித் இலக்கியத்தை உருவாக்கியது. தங்கள் ஒடுக்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களை கண்டடைதல் போராட்டத்திற்காக தங்கள் உணர்வுகளை ஒருங்கிணைத்தல் தங்கள் பண்பாட்டுச்சிக்கல்களை ஆராய்தல் ஆகியவை தலித் இலக்கியத்தின் அடிப்படை நோக்கங்கள்
Self-conscious - தன்னுணர்வு
தான் என்ற உணர்வு. உளவியலில் முக்கியமான கருத்தாக்கம் இது. தன்னிலை தன்முனைப்பு இரண்டிலிருந்தும் வேறுபட்டது
Subject - தன்னிலை
மொழியில் உருவாகும் தான் என்னும் நிலைபாடு. இது உளநிலைபாடும் கூட என்று ழாக் லக்கான் முதலியோர் வகுப்பார்கள்.
Apology - தன்னிலையுரை
தன் தரப்பை விளக்கிச் சொல்லும் உரை
Auto biography - தன்வரலாறு
தன் வாழ்க்கையைத் தானே சொல்லும் நூல்
Soliloquy - தனிமையுரை
தனித்திருக்கும் கதாபாத்திரம் தனக்குத் தானே உரையாடிக் கொள்வது
Ego - தன்முனைப்பு
தன் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் காணும் நிலை. தன்னை மையமாக்கி அறியும் நிலை. ஃப்ராய்டிய உளவியலில் இது முக்கியமான கருத்தாக்கம். தன்னுணர்வு
Individualism - தனிமனிதவாதம்
தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் அணுகும் உருவாக்க முறை. தனிமனித சிந்தனையையே மறுத்த மதமேலாதிக்க காலகட்டத்தில் அதிலிருந்து மீறி எழுந்த எதிர்ப்பாக இது உருவாயிற்று.
Review Session 12
Cliche - தேய்வழக்கு
பழக்கத்தால் பொருளிழந்துபோன சொல்லாட்சி
Triteness - தேய்நடை
பழக்கத்தால் பொருளிழந்துபோன நடை
Concrete - திண்மம்
புறவயமான திட்டவட்டமான ஒன்று .
Pamphlet - துண்டுப்பிரசுரம்
தனியாக அச்சிட்டு வினியோகிக்கப்படும் சிறிய கட்டுரை
Tragedy - துன்பியல்
துன்பத்தில் முழுமைகொள்ளும் கலை நோக்கு. துன்பத்தில் முடியும் இலக்கியப்படைப்பு.
Myth - தொன்மம்
தொன்றுதொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கை.
Communication - தொடர்புறுத்தல்
பொருளை முன்வைப்பவன் பெறுபவனிடம் கொள்ளும் தொடர்பு
Realism - நடப்பியல்
புலன்வழி அறிவனவற்றை மட்டுமே ஏற்கும் கதை சொல்லும் முறை .யதார்த்தவாதம்.
Stylistics - நடையியல்
மொழியை அமைக்கும் விதம் குறித்து ஆராயும் அறிவுத்துறை
Pragmatism - நடைமுறைவாதம்
ஒன்றின் விளைவும் பயன்பாடுமே அதை மதிப்பிட ஏற்ற சிறந்த வழிகள் என்று சொல்லும் சிந்தனை முறை
Review Session 13
Stream of consciousness - நனவோடை எழுத்து
மனம் ஓடும் விதத்தை அப்படியே பதிவுசெய்ய முயலும் எழுத்து. உதிரி சிந்தனைகள், கனவுகள், நினைவுகள், உளறல்கள் ஆகியவற்றால் ஆனது. சிலர் நினைவோடை எனத் தவறாக மொழிபெயர்க்கிறார்கள். நினைவுகள் மட்டும் ஓடும் எழுத்தல்ல இது
Unconscious - நனவிலி
மனித மனத்தின் அடுக்குகலுக்கு கீழே உள்ள அறியப்படாத மனம். ஒரு ஃப்ராய்டிய கருத்தாக்கம்.
Modernity - நவீனத்தன்மை
நவீனத் தொழில் நுட்ப வளர்ச்சியை ஏற்றுள்ள தன்மை
Modernism - நவீனத்துவம்
நவீன மயமாதலின் முழுமைக்ட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்மறை இயல்புகளை அதிகமாகக் கவனிப்பது இது
Modernization - நவீனமயமாதல்
நவீனத் தொழில் நுட்பத்தின் மூலம் மாறுதலுக்குள்லாதல். கல்வி, போக்குவரத்து தகவல் தொடர்பு ஆகியவற்றில் வளர்ச்சி உற்பத்தியும் வினியோகமும் பேரளவில் ஆதல்
Folklore - நாட்டாரியல்
நாட்டுப்புற கலையிலக்கியம் குறித்த ஆய்வு
நாஞ்சில் இலக்கியம்
குமரிமாவட்ட நாஞ்சில் நிலம் சார்ந்த எழுத்து
Abstract - நுண்மம்
பருவடிவமாக தெரியாத அல்லது உருவம் இல்லாத ஒன்று . அருவம் என்ற சொல்லாட்சியும் உண்டு
Sensibility - நுண்ணுணர்வு
கலைகளை கற்பனைமூலம் உள்வாங்கிக் கொள்ளும் திறன்
Bibliography - நூலடைவு
ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள நூல்களின் பட்டியல்
Review Session 14
Phenomenology - நிகழ்வியல்
அனுபவங்கள் எப்படி நம்மில் நிகழ்கின்றனவோ அதனடிப்படையில் மட்டுமே அவற்றின் ஒழுங்குகளையும் தொடர்புகளையும் அறிய முடியும் என்று வாதிடும் கோட்பாடு. அதிகமும் பிரபஞ்ச நிகழ்வுகளைப்பற்றிய தத்துவ நோக்கு இது
Empiricism - நிரூபணவாதம்
புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை. புலனறிவாதம் அனுபவ வாதம் என்ற சொற்களும் உண்டு
Memoir - நினைவுப்பதிவு
ஒருவரின் நினைவுகளின் பதிவாக வரும் எழுத்துமுறை
Fable - நீதிக்கதை
ஒரு கருத்தை வலியுறுத்தும் மையம் கொண்ட சிறிய கதை
Mysticism - நுண் இறைவாதம்
இறையனுபவத்தை அல்லது பிரபஞ்ச அனுபவத்தை ஒருவர் தன் தனிப்பட்ட நுண்ணுணர்வால் அறிந்து முன்வைக்கும் நோக்கு
Thesis - நேர்கருத்து
ஒரு சூழலில் முன்வைக்கப்படும் கருத்து. முரண்கருத்து அதை எதிர்கொள்கையில் முரணியக்கம் உருவாகிறது
Parody - பகடி
போலி செய்து ஏளனம் செய்யும் முறை
Analysis - பகுப்பாய்வு
ஒன்றை பல உட்கூறுகளாகப் பிரித்து அவற்றை ஆராய்ந்து அதன் இயல்புகளை வகுக்கும் முறை
Rationalism - பகுத்தறிவுவாதம்
ஒவ்வொன்றிலும் புறவயமான தர்க்க ஒழுங்கை எதிர்பார்க்கும் நோக்கு
Workshop - பயிலரங்கு
கலை இலக்கியங்களை கூட்டாக சேர்ந்து பயிலும் முறை
Review Session 15
Sympathy - பரிவுணர்வு
ரசிகன் அல்லது வாசகன் படைப்பின் கதாபாத்திரம் மற்றும் சூழல் மீது கொள்ளும் இரக்க உணர்ச்சி
Angst - பறதி
இருத்தலியல் சார்ந்து ஒருவரில் உருவாகும் நிலைகொள்ளாமை பதற்றம் அல்லது தடுமாற்றம்
Behaviorism - பழக்கவாதம்
மன இயக்கத்தை பழக்கங்களை வைத்து அறியும் அறிவுத்துறை
Image - படிமம்
ஒரு அகவய உணர்ச்சி அல்லது புரிதலின் பிரதிநிதியாக படைப்பில் வெளிப்படும் ஒரு காட்சி அல்லது பொருள் அல்லது நிகழ்வு. அது எதைக்குறிக்கிறது என்பது படைப்பில் சொல்லப் படுவதில்லை. அப்படிமமே அது உருவாக்கும் மன எழுச்சி மூலம் வாசகன் மனத்தில் அந்த உணர்ச்சியை அல்லது புரிதலை வாசகன் மனதில் உருவாக்கும்
Icon - படிமை
ஒரு பொருள் அல்லது மனிதர் ஒரு குறிப்பிட்ட கருத்தின் வடிவமாகவே ஆதல். பாரதி தமிழ் மறுமலர்ச்சியின் படிமை.
Imagism - படிமவியல்
படிமங்களை கலையின் அடிப்படைக் கூறாக முன் வைத்த அழகியல் முறை
Column - பத்தி
ஒரு எழுத்தாளர் இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதும் கட்டுரைப்பகுதி
Bliss - பரவசம்
உச்சகட்ட இன்பம். கற்பனாவாதக் கலைகளைப்பற்றிய பேச்சுகளில் இச்சொல் பயன்படுத்தப்படும்
Dimension - பரிமாணம்
ஒன்றின் ஒரு தோற்றம். உண்மைக்கு பல பரிமாணங்கள் உண்டு
Evolution - பரிணாமம்
படிப்படியான வளர்ச்சி. சாதகமான கூறுகளைப் பெருக்கி பிறவற்றை விலக்கி நடைபெறும் வளர்ச்சியை மட்டுமே இச்சொல்லால் குறிக்கவேண்டும்
Review Session 16
Polyphonic - பலகுரல்தன்மை
பலகுரல்களில் பேசும் தன்மை. ஒன்றுக்கும் மேற்பட்ட தரப்புகளை முன்வைத்தல். பலவகையான கூற்றுகள் முயங்கி வருதல். இலக்கியப் படைப்புகளின் இயல்பு இது என்பது நவீன விமரிசனத்தின் கருத்து
Intertextuality - பல் பிரதித்தன்மை
ஒரு நூலுக்குள் பல நூல்கள் தொடர்பு கொண்டிருத்தல். பல நூல்களை தொட்டுச்செல்லும் நூலியல்பு. ஊடுபிரதித்தன்மை என்ற சொல்லே மேலும் பொருத்தம்
Text - பனுவல்
அர்த்தத்தை உருவாக்கும்பொருட்டு சொற்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் அமைப்பு. நூல் என்பதன் மொழியியல் பெயர்.
Lyric - பா
இசையும் நெகிழ்வும் கலந்த கவிதை
Lyricism - பாவியல்பு
இசையும் நெகிழ்வும் கலந்த தன்மை
Erotica - பாலுணர்வு படைப்பு
பாலுணர்வைத் தூண்டும் படைப்பு
Pornography - பாலுறவு எழுத்து
பாலுணர்வைத் தூண்டும் வணிக எழுத்து
Decoder - பிரிப்பாளன்
குறிகளின் அமைப்பான படைப்பைப் பிரித்து பொருள்கொள்பவன். அமைப்பியல் சார்ந்த சொல்
Propaganda writing - பிரச்சார இலக்கியம்
ஒரு குறிப்பிட்ட கருத்தை பிரச்சாரம் செய்யும் பொருட்டு உருவாக்கப்படும் ஆக்கம்
Hallucination - பிரமைக்காட்சி
மனப்பிரமையால் உருவாகும் மாயக்காட்சி. மீயதார்த்தவாதத்தில் இது முக்கியமானது..
Review Session 17
Text - பிரதி
அர்த்தத்தை உருவாக்கும் பொருட்டு சொற்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் அமைப்பு. நூல் என்பதன் மொழியியல் பெயர். பனுவல் என்றும் தமிழாக்கம் உண்டு
Fallacy - பிழைத்தோற்றம்
இல்லாத ஒரு சிறப்பை ஒன்றின்மீது ஏற்றிகூறும் இலக்கியப் பிழை. இது இலக்கியத் திறனாய்வில் முக்கியமான கலைச்சொல்
Other - பிறன்
தன்னை ஒரு இருப்பாக உணரும் ஒருவன் அறியும் மற்றவர். இது இருத்தலியலில் முக்கியமான கலைச்சொல். ‘பிறனே நரகம்’. என்பது சார்த்ர் முன்வைத்த புகழ்பெற்ற இருத்தலியல் கூற்று
Genealogical History - பிறப்புத்தொடர் வரலாறு
வம்சாவளி வரலாறு. பாரம்பரிய வரிசை வரலாறு.
Split personality - பிளவாளுமை
ஒரு மனிதன் மன அளவில் இரு மனிதர்களாகப் பிளவுறும் உளச்சிக்கல். இது பல நாவல்களுக்குக் கதைக்கருவாகியுள்ளது
Post Modernism - பின்நவீனத்துவம்
நவீனத்துவத்தின் இயல்புகளை உதறி எழுந்த அடுத்த காலகட்டம். தர்க்கபூர்வ அணுகுமுறை . தத்துவப்போக்கு மையப்படுத்தப்பட்ட கலை வெளிப்பாடுகள், தன்னிலை உருவகங்கள் , பெருங்கதையாடல் ஆகியவற்றுக்கு எதிரான மனப்போக்குகள் வெளிப்படுவது
Post Structuralism - பின் அமைப்புவாதம்
மொழியை ஓர் அமைப்பாக அணுகாமல் ஒரு நிகழ்வாக அணுகுவது இம்முறை . மொழியின் நிலையான அர்த்தத்தை மறுத்து அதை ஒரு தொடர் செயல்பாடாக காண்பது. அமைப்புவாதம் இலக்கிய ஆக்கங்களை எளிமைப்படுத்திவிட்டது என்று கருதும் பின் அமைப்புவாதிகள் அதை சொல்பவர் கேட்பவர் நடுவே நிகழும் மேலும் சிக்கலான ஒரு கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக காட்டுகிறார்கள். இவ்வணுகுமுறை பின் நவீனத்துவர்களால் விரும்பப்படுகிறது.
Empiricism - புலனறிவாதம்
புலன்களுக்கு முன் நிரூபிக்கக் கூடியதே உண்மை என்று கூறும் அணுகுமுறை.
Climax - புனைவுச்சம்
ஒரு புனைவு அதன் உச்சத்தை அடைதல்
Avant-garde - புத்திலக்கியம்
நவீன யுகம் உருவானபோது உருவான நவீன இலக்கியப் போக்கு. இலக்கியம் சான்றோருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியது என்பது இதன் அடிப்படை.
Review Session 18
Romanticism - புத்தெழுச்சிவாதம்
உணர்ச்சிகளை உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் கலைநோக்கு. கற்பனாவாதம்
Renaissance - புதுமலர்ச்சிக்காலம்
கலை சிந்தனை இலக்கியம் ஆகியவற்றில் மலர்ச்சி ஏற்படும் காலகட்டம். பொதுவாக இச்சொல்லால் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சியே குறிக்கப்படுகிறது
New Historicism - புதுவரலாற்றுவாதம்
வரலாற்றை ஒரு புனைவு என்று அவர்களும் ஏற்றுக் கொண்டு அப்புனைவுக்குள் நாம் பொதுவான போக்குகளையும் சாராம்சமான கருத்துகக்ளையும் தேடும் நோக்கு.எல்லா இலக்கியப் படைப்புகளும் வரலாறு என்ற அந்த பெரிய புனைவுக்குள் நிகழக்கூடிய புனைவுகளேயாகும். இந்தப் புனைவுகள் சேர்ந்துதான் வரலாறாக ஆகின்றன. இவற்றின் மூலமே வரலாறு என்னும் புனைவு வளர்கிறது . ஆகவே இலக்கியப் படைப்புகளை ஒரு தனித்த வடிவமாகக் கண்டு அவற்றின் உட்கூறுகளையும் அவற்றின் தொடர்பு முறைகளையும் மட்டும் ஆராயும் மொழியியல் அணுகு முறைகள் பொருந்துவன அல்ல என வாதிடும் இத்தரப்பினர் இலக்கியப் படைப்புகளை அவை முளைத்தெழுந்து காலூன்றி நிற்கக்கூடிய வரலாற்றில் வைத்து அணுகினால் மட்டுமே அதற்குப் பொருள் இருக்கும் என்கிறார்கள். 1980களில் ஸ்டீபன் கிரீன்பிளாட் . ஜெரோம் மெக்கான், மெர்ஜோரி லெவின்சன், மெரிலின் பட்லர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கோட்பாடு
Myth - புராணிகம்
தொன்று தொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கை. தொன்மம் என்ற சொல்லும் உண்டு. அது மதம் சார்ந்ததாக இருக்கையில் இச்சொல்லை பயன்படுத்துவது நல்லது
Parole - புறமொழி
பேசும்போது நாம் புறத்தே கேட்டு புரிந்து கொள்ளும் மொழி. அகமொழி என்ற இன்னொன்று உண்டு. அது ஒரு பண்பாட்டின் உள்ளுரையாக உள்ளது. அதுவே கேட்கும் மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது
Grand Narrative - பெருங்கதையாடல்
ஒட்டுமொத்த வரலாற்றுக்கும் பொருந்தும்படி ஒட்டுமொத்த சமூகத்தையும் தழுவியபடி உருவாக்கப்படும் புனைவுகள். பின் நவீனத்துவக் கோட்பாட்டின்படி தத்துவங்கள் கருத்தியல் எல்லாமே கதையாடல்கள்தான்.
Feminism - பெண்ணியம்
வரலாற்றையும், விழுமியங்களையும் பெண்ணாக நின்று நோக்குவதே பெண்ணியம் . அந்நிலையில் இங்குள்ள சமூக அமைப்பும் கருத்தியலும் ஆண்களால் பெண்களை ஒடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவை என்பது தெரியவரும். பெண்ணின் இயல்புகளாக ஆண்கள் உருவாக்கியவையே பண்பாட்டால் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றின் பிடியிலிருந்து பெண்ணின் சிந்தனையையும் ஆழ்மனத்தையும் மீட்டெடுத்து விடுதலை பெறச்செய்வதே பெண்ணியத்தின் நோக்கம்.
Parole - பேச்சுமொழி
பேசும்போது நாம் புறத்தே கேட்டு புரிந்துகொள்ளும் மொழி. புறமொழி என்ற சொல் மேலும் பொருத்தம். அகமொழி என்ற இன்னொன்று உண்டு. அது ஒரு பண்பாட்டின் உள்ளுறையாக உள்ளது. அதுவே கேட்கும் மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது.
Generalization - பொதுமைப்பாடு
தகவல்களை தொகுத்து பொதுமைப்படுத்தி முடிவுக்கு வருதல்
Ambiguity - பொருள் மயக்கம்
இலக்கியத்தில் ஒரு சொல்லோ படிமமோ வரியோ பொருள் மயக்கம் அளித்தல். இது இலக்கியத்தில் சாதகமான ஒன்றாகவே நோக்கப்படுகிறது. வில்லியம் எம்சன் என்பவர் ஏழுவகை பொருள் மயக்கங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்
Review Session 19
Economics - பொருளியல்
பொருள் சார்ந்த அனைத்தையும் குறித்து ஆராயும் அறிவுத்துறை
Materialism - பொருள் முதல்வாதம்
பருப்பொருள் புறவயமான இருப்பு கொண்டது என்றும் அதுவே அடிப்படை என்றும் வாதிடும் கருத்தியல் தரப்பு
Humanism - மனிதாபிமானம்
மனிதன் மீதான அன்பிலிருந்து உருவாகும் உலக நோக்கு. மனிதநேயம் என்றும் பெயர் உண்டு
Values - மதிப்பீடுகள்
சமூகம் முக்கியமாக கருதும் நடத்தை முறைகள்
Magic realism - மாய யதார்த்தவாதம்
புலன்களை மீறிய மாய அனுபவங்களை யதார்த்தத்தைச் சித்தரிப்பதுபோலவே துல்லியமான தகவல்களுடனும் . காட்சித் தன்மையுடனும் சித்தரிக்கும் எழுத்துமுறை. யதார்த்தத்தில் மாயமும் கலப்பது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் மாலுமிக்கதைகளில் இருந்து அவர்கள் உருவாக்கிக் கொண்ட கூறுமுறை இது. இவற்றில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூடநம்பிக்கைகளோ அல்ல. அவை குறியீட்டுத்தன்மை கோண்டவை. 1940 களில் கியூப எழுத்தாளரான அலெஜோ கார்பெண்டீர் என்பரால் உருவாக்கப்பட்ட சொல்லாட்சி இது.
Fantasy - மிகுபுனைவு
யதார்த்தத்துக்கு கட்டுப்படாமல் கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட கனவுச்சாயல் கொண்ட புனைவுமுறை. மிகைப்புனைவு என்றும் சொல்வர்
Irony - முரண்நகை
முரண்பாட்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை. அதிகமும் விமரிசனத்தன்மை கொண்டது. பேரிலக்கியங்கள் வாழ்க்கையின் முரண்நகையை வெளிப்படுத்தும் என்பார்கள்
Paradox - முரண்பாடு
ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துக்கள் அல்லது உண்மைகள்
Depression - மனத்தளர்வு
மனச்சோர்வு மூலம் உருவாகும் செயலின்மை. இலக்கிய விவாதங்களில் இது ஒரு படைப்பு மனநிலையாகக் கொள்ளப்படுகிறது.
Methodology - முறைமை
கருத்துக்களை உருவாக்கவும், பரிசீலிக்கவும் கடைப்பிடிக்கப்படும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறை
Review Session 20
Nihilism - முழுமறுப்புவாதம்
அனைத்துக் கோட்பாடுகளையும் மறுக்கும் தத்துவ நிலைபாடு
Dialectics - முரணியக்கம்
கருத்துக்கள் ஒன்றோடொன்று முரண்பட்டு மோதி ஒன்றை ஒன்று உள்வாங்கி புதிய முரண்பாடுகளை அடைந்து தொடர்ந்து முன்னேறும் இயக்கநிலை.
Antithesis - முரண்கருத்து
ஒரு நேர்கருத்தை முரண்பட்டு எதிர்க்கும் எதிர்கருத்து
Method - முறை
ஒழுங்குபடுத்தப்பட்ட வழிமுறை
Methodology - முறையியல்
காண்க முறைமை. இது தவறான சொல்லாட்சி
Motif - மூலக்கருத்து
ஒரு சிந்தனைக்கு அடிப்படையாக உள்ள முதல் கருத்து
Archetype - மூலப்படிமம்
பண்பாட்டின் ஆழத்தில் இருக்கும் அடிப்படையான படிம வடிவம். அது தொடர்ந்து பல படிமங்களை உருவாக்கும். தொல்படிமம், ஆழ்படிமம் போன்றவை பிற சொற்கள். சி.ஜி.யுங் உருவாக்கிய சொல்லாட்சி இது.
Meta language - மேநிலைமொழி
மெய்யியல் அடிப்படையான சிந்தனைகள் மட்டும் அடங்கிய ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உருவாக்கப்படும் தனி மொழி . மீமொழி தனிமொழி என்னும் சொல்லாட்சிகளும் உண்டு
Sentiment - . மிகையுணர்ச்சி
உணர்ச்சிகளை வேண்டுமென்றே அதிகமாக்கி வாசகனைக் கலங்க வைக்கும் உத்தி. இலக்கியத்தில் இது எதிர்மறையானதாகவே கருதப்படும்
Hyperbole - மிகை நவிற்சி
மிகையாக கூறும் இலக்கிய அணி
Review Session 21
Transcendentalism - மீ இறையியல்
மனிதனின் உள்ளார்ந்த ஆன்மீக ஆற்றலை மையமாக்கி சிந்திக்கும் போக்கு. எமர்சன் இதன் முக்கியப் பிரச்சாரகர்
Meta language - மீமொழி
ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக உருவாக்கப்படும் தனி மொழி . ஒரு மொழிக்குள் செயல்படும் நுண்மொழி. ஒரே மொழிக்குள் சில சொற்களுக்கு மட்டும் சிறப்பு அர்த்தம் கொடுத்து உருவாக்கப்படும் மொழி
Surrealism - மீயதார்த்தவாதம்
புலன்களால் நாம் காணும் யதார்த்தத்துக்கு உள்ளே நம் ஆழ்மனம் அறியக்கூடிய இன்னும் தீவிரமான ஓரு யதார்த்தம் உள்ளது என்று நம்பி அதை வெளிப்படுத்த முயலும் அழகியல் வடிவம். இந்த ஆழ்ந்த யதார்த்தம் கனவுகளில் வெளிப்படுகிறது. மனிதனின் அடிப்படைக் குணங்களான காமம், வன்முறை மற்றும் அச்சங்கள் ஆகியவற்றால் ஆனது இது. அதை வெளிப்படுத்த கனவுகளுக்குரியத் தனியானத் தர்க்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் . அதற்குரிய கருவிகள் படிமங்களே என இது எண்ணியது.
Metaphysics - மீபொருண்மைவாதம்
பொருள்வயமான உலகுக்கு நாம் புலன்கள் வழியாக அறியும் ஒரு தர்க்கம் உள்ளது போலவே பொருள்வய உலகுக்கு அடிப்படையாக உள்ள நுண்மையான அகஉலகுக்கும் ஒரு தனித்த தர்க்கம் உள்ளது என்று நம்பி அதை சிந்தனைமூலம் உருவாக்கிக் கொள்ளும் ஓரு முறை. இயற்கை இயங்கும் முறை, பிரபஞ்ச உண்மைகள், மனித இருப்பின் நுட்பங்கள் ஆகியவற்றைப்பற்றிய புலன்கடந்த சிந்தனை
Prologue - முகவுரை
படைப்பின் முன் உள்ள தனிக் கூற்று
Capitalism - முதலாண்மை
சமூக மூலதனத்தை சிலர் உரிமை கொண்டுள்ள சமூக அமைப்பு
Bourgeoisie - முதலாளர்
சமூக மூலதனத்தை கைப்பற்றி உரிமை கொண்டுள்ளவர்கள்
Epilogue - முடிவுரை
படைப்பின் பின் உள்ள தனிக் கூற்று
Dialectics - முரணியக்கம் II
ஒரு நேர் கருத்தும் அதன் எதிர் கருத்தும் முரண்படுவதன் விசை மூலம் முன்னகரும் போக்கு. மேலை தத்துவத்தில் பிளேட்டோ காலம் முதல் முன் வைக்கப்படுவது. எந்த சக்தியும் அதன் எதிர்சக்தியுடன் மோதுவதன் மூலமே இயக்கம் கொள்ள முடியும் என்ற கோட்பாடு இது. இயங்கியல் என்பது பிறசொல்
Dialectical Historical Materialism - முரணியக்க வரலாற்றுப் பொருள் முதல்வாதம்
மார்க்சியத்தின் தத்துவப் பெயர். உற்பத்தி வினியோகம் ஆகிய தளங்களில் உள்ள பொருளியல் சக்திகளின் முரணியக்கம் மூலமே வரலாறு நிகழ்கிறது என்ற கோட்பாடு
Review Session 22
Progressive aesthetics - முற்போக்கு அழகியல்
மார்க்ஸிய அடிப்படையில் உருவான அழகியல். சமூகத்தை முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்று பிரித்துப் பார்த்து இவற்றுக்கு இடையிலான மோதல் மூலமே சமூகம் செயல்படுகிறது என்று நம்பும் மார்க்சியர் பாட்டாளிகளின் விடுதலைக்காக அவர்களின் பண்பாட்டுக் கூறுகளை முன்னெடுப்பதையே முற்போக்கு அழகியல் என்கிறார்கள்.
Narration - மொழிபு
விவரித்து உணர்த்தும் முறை. கதை சொல்லல். எடுத்துரைத்தல். கதையாடல் என்ர தவறான மொழியாக்கம் உண்டு
Narratology - மொழிபியல்
விவரித்து உணர்த்தும் முறைகளைப்பற்றிய அறிவியல்
Realism - யதார்த்தவாதம்
ஐம்புலன்களுக்கும் அவற்றின் மையமான பகுத்தறிவுக்கும் உள்பட்ட அனுபவங்களை மட்டுமே கூறக்கூடிய இலக்கிய எழுத்துமுறை. மேலைநாட்டில் வலுப்பெற்ற பகுத்தறிவு வாதத்தின் விளைவாக இது உருவாயிற்று. அனைவருக்கும் பொதுவாக அறியப்படக்கூடிய அனுபவங்கள் மட்டுமே இதில் கூறப்படும். மன உணர்வுகள் கூட இந்த பொதுவான அறிதல்தளத்துக்கு உட்பட்டவையாகவே இருகக்வேண்டும்.
வண்டல் இலக்கியம்
தஞ்சை பகுதி நஞ்சை நில எழுத்து
Colloquialism - வட்டார வழக்கு
ஒருகுறிப்பிட்ட நிலப்பகுதியின் பேச்சு மொழியை படைப்பில் பயன்படுத்தும்போக்கு
Historiography - வரலாற்றியல்
வரலாறு எழுதப்படும் முறைகளைப்பற்றிய அறிவுத்துறை
Chronicle - வரலாற்றறிக்கை
வரலாற்று நிகழ்வுகளின் பட்டியல்
Historicism - வரலாற்று வாதம்
வரலாறு எழுதுதலில் செயல்படும் நோக்கம் ‘வரலாற்று வாதம்’ எனப்படுகிறது. வரலாற்றுக்கு ஒரு திட்டம் உண்டு என்றும், அவ்வரலாற்றின் சாரமாக சில கருத்துக்கள் உள்ளன என்றும் நம்புவதே வரலாற்றுவாதம். வரலாறு ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் முன்னேறும் ஒரு பரிணாமம் என்று நம்புவது அது.
Historical Materialism - வரலாற்றுப் பொருள்முதவாதம்
வரலாற்றுப்பரிணாமம் என்ற கருத்து மற்றும் பொருட்சக்திகள் முரண்பட்டு முன்னகர்வதன் வழியாக நிகழ்கிறது என்ற கோட்பாடு. ஹெகல் முன்வைத்தது
Review Session 23
Decorum - வரைமை
இலக்கியத்தில் கடைப்பிடிக்கப்படவேண்டிய பொருத்தப்பாடுகள்
Demotic - வழக்குநடை
இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் எளிய பேச்சு நடை
Archaism - வழக்கொழி சொல்
மறைந்துபோன பழைய சொல்
Oral tradition - வாய்மொழிமரபு
எழுதப்படாமல் பேச்சு பாட்டு மூலமே நீடித்திருக்கும் இலக்கிய கலைமரபு.
Jargon - வெற்று வழக்கு
சாரமில்லாத சொல்லாட்சிகள்
Axiom - விழுமியம்
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறி
Axiology - விழுமியவியல்
கருத்துக்களின் வாழ்க்கை மதிப்பை ஆராயும் அறிவுத்துறை
Review Session 24
Say Hello